

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் முஸ்லிம் தம்பதிகளை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளார்.
பெரும்பாலான மாநிலங்களில் மக்கள்தொகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை இனி சிறுபான்மையினர் என்ற பட்டியலில் இடம்பெற செய்யக்கூடாது என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் சமூகம் கடந்த 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையேயான 10 வருடத்தில் 0.8 சதவீத மித வளர்ச்சியை எட்டி 13.8 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து 17.22 கோடி என்ற எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளையில், 96.63 கோடியாக இதே காலகட்டத்தில் இருந்த இந்துக்களின் மக்கள்தொகை 0.7 சதவீத சரிவு கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மேற்கோள்காட்டி பேசிய பிரவீன் தொகாடியா, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். இது குறித்து அவர் "Time to Act Before Too Late" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையில் எழுதியுள்ளார்
அதில், "முஸ்லிம்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அதை குற்றமாக பாவிக்க வேண்டும். அவர்களுக்கு ரேஷன், வேலை, கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை உணர்த்த வேண்டும். இந்த 'பாப்புலேஷன் ஜிகாத்'-க்கு எதிராக நாம் அனைவரும் செயல்படாவிட்டால், நமது பாரதம் விரைவில் இஸ்லாமியர்களின் நாடாகவே மாறிவிடும்.
அண்மையில் வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நாம் விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜும், "முஸ்லிம்களை இனியும் சிறுபான்மையினர் என அழைக்கக் கூடாது. மக்கள்தொகையில் கால்வாசி அளவை அவர்கள் இடம்பெற்றுள்ளனர். காஷ்மீரில் 90 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 70 முதல் 90 சதவீதம் அவர்களே உள்ளனர்." என்று கூறியுள்ளார்.