Last Updated : 12 Oct, 2020 10:40 AM

 

Published : 12 Oct 2020 10:40 AM
Last Updated : 12 Oct 2020 10:40 AM

பிஹார் தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவின் தாக்கம்: நிதிஷ் குமாருக்கு அதிக இழப்பு?

புதுடெல்லி

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாருக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், லோக் ஜன சக்தி(எல்ஜேபி) கட்சியின் நிறுவனர் ஆவார். தேசிய அளவில் தலீத் ஆதரவு தலைவராகக் கருதப்படும் பாஸ்வானின் எல்ஜேபி, மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின்(என்டிஏ) உறுப்பினராக உள்ளது.

இந்தமுறை, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் எல்ஜேபியானது கூட்டணியில் இருந்து விலகித் தனித்து போட்டியிடுகிறது. இந்த போட்டியில் எல்ஜேபி பிஹாரின் 243 தொகுதிகளில் சுமார் 145 இல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இத்தொகுதிகளில் எல்ஜேபி, நிதிஷ்குமாரின் ஜேடியு வேட்பாளர்களை எதிர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவை ராம்விலாஸின் மகனான மக்களவை எம்.பி சிராக் பாஸ்வான் எடுத்திருந்தார்.

பாலிவுட் நடிகராக விரும்பிய இவர், சில வருடங்களுக்கு முன் அரசியலில் நுழைந்தது முதல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவின் தாக்கம் பிஹார் தேர்தலில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அனுதாபங்களால், எல்ஜேபிக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்தாலும் அவை வெற்றி பெறும் அளவிற்கு இருப்பது சந்தேகமே எனக் கருதப்படுகிறது.

அதேசமயம், இந்த அனுதாப வாக்குகள் முதல்வர் நிதிஷின் ஜேடியுவிற்கு அதிக தொகுதிகளில் வெற்றியை தடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பிஹாரின் மூத்த பத்திரிகையாளர் வட்டாரம் கூறும்போது, ‘எல்ஜேபியின் தனித்து போட்டியால், ஜேடியுவை விட அதிக தொகுதிகள் பெற்று பாஜக முதல்வர் பதவியை கோரும்.

இதனால் என்டிஏவிலிருந்து விலகி தனித்து போட்டி என அறிவித்த எல்ஜேபியை மத்திய அமைச்சரவையில் இருந்து பாஜக அகற்றவில்லை. தற்போதைய நிலையில், பாஸ்வானின் மறைவால் பாஜகவின் பலன் அதிகரிப்பதுடன், நிதிஷுக்கு இழப்பையும் ஏற்படுத்தும்.

என்டிஏவில் இருந்து எல்ஜேபி வெளியேறாத நிலையில் பாஸ்வான் மறைந்திருந்தால் அந்த அனுதாப வாக்குகள், கூட்டணி உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும்’ எனத் தெரிவித்தனர்.

2015 தேர்தலில் என்டிஏவால் எல்ஜேபிக்கு 46 தொகுதிகள் ஒதுக்கப்படும் 2 இல் மட்டுமே வெற்றி கிடைத்தன.

பிஹாரில் சுமார் 16 சதவிகிதம் கொண்ட தலீத் வாக்குகளில் எல்ஜேபிக்கு சராசரியாக 4 கிடைத்து வந்தன.

2015 தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியால் வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ், இதையும் தடுக்க முயன்றார். பிஹாரின் தலீத்துகளில் ‘மகாதலீத்’ எனப் புதிய பிரிவை உருவாக்கினார்.

இந்தமுறை கூடுதலாகக் கிடைக்கும் அனுதாப வாக்குகள் எல்ஜேபி எதிர்க்கும் ஜேடியுவிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் தெரிகின்றன. குறிப்பாக பிஹாரின் மற்ற தொகுதிகளுடன், மக்களவைத் தனித்தொகுதிகள் கொண்ட ஐந்து மாவட்டங்களில் எல்ஜேபிக்கு அதிக செல்வாக்கு உண்டு.

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலில் சிலநூறு முதல் சில ஆயிரம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், பாஸ்வானின் மறைவு பிஹார் தேர்தலில் நிதிஷுக்கு பெரும் இழப்பை உருவாக்கும் வாய்ப்பை தேடித் தந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x