

வனத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க அரசு அண்மையில் வனத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தது. மொத்தம் உள்ள 2 ஆயிரம் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆனால் இந்தப் பணியிடங்களுக்கு பொறியியல், முதுகலை பட்டம், ஆராய்ச்சிப் படிப்பு என உயர்கல்வி படித்த ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதுகுறித்து மால்டா வனச் சரக அதிகாரி சுபிர் குமார் குஹா நியாஜி கூறும்போது, “வன உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும். மேலும் இது ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் மட்டுமே. ஆனால் இந்தப் பணிக்கு ஏராளமான ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், பொறியில் பட்டதாரிகள், பிஎச்.டி. படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.
விண்ணப்பதாரரான பட்டமேற்படிப்பு படித்த சுதீப் மோய்த்ரா கூறும்போது, “இது ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம் என்றாலும் நான் அரசு வேலையைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன்.
தற்போது வேலை கிடைப்பதே சிரமமாக உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலையை இழந்துவிட்டனர். எனவே, எந்த அரசு வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என இதற்கு விண்ணப்பித்தேன்” என்றார்.
எம்.எஸ்சி. பொருளியல் படித்த ரக்திம் சந்தா கூறும்போது, “கரோனா பெருந்தொற்று நேரத்தில் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில், சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும் எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி கூறும்போது, “8-ம் வகுப்பு தேர்ச்சி உள்ள இந்த பணியிடத்துக்கு உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. அவர்களை நாங்கள் தடுக்க முடியாது” என்றார்.
மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.