Published : 12 Oct 2020 06:52 AM
Last Updated : 12 Oct 2020 06:52 AM

வேளாண் சட்டங்கள் விவசாயிகளை முன்னேற்றும்: இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் உறுதி

ரோன் மால்கா

புதுடெல்லி

‘‘இந்திய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் வருவாய் பெருகும்’’ என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மால்கா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் மண் வளம் கிடையாது. போதிய தண்ணீர் இல்லை. சீரான பருவநிலை கிடையாது. பாலைவனம், உப்பு நீர் என பல்வேறு பின்னடைவுகள் உள்ளன. எனினும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத்தில் பல்வேறு சாதனைகளை அந்த நாடு படைத்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்திய வேளாண் துறை வளர்ச்சிக்கு இஸ்ரேல் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது.

இந்த பின்னணியில் இந்தியநாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண்சட்டங்கள் குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன்மால்கா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல் நாட்டில் இடைத்தரகர்கள் கிடையாது. விவசாயிகளும் நுகர்வோரும் நேரடி தொடர்பில் உள்ளனர். டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதேஅணுகுமுறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த ஏதுவாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நல்ல விலை கிடைக்கும்

புதிய வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் வருவாய் பெருகும். பயிர் சாகுபடியில் இந்திய விவசாயிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மட்டுமன்றி, நுகர்வோரும் பெரிதும் பயன் அடைவார்கள். விவசாயிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கும். மேலோட்டமாக பார்க்கும் போது சில பிரச்சினைகள் இருப்பது போல தோன்றலாம். அவை காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

புதிய நடைமுறைக்கு மாற விவசாயிகளுக்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படும் என்று கருதுகிறேன். ஆனால் புதிய நடைமுறை, புதிய சந்தைமுறைக்கு மாறும் போது அதன் நிறைவான பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். இஸ்ரேல் நாட்டில் வேளாண்மையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினோம். அதன் பலன்களை இப்போது அனுபவித்து வருகிறோம். இதேபோல இந்திய வேளாண் சட்டங்களால் இந்திய விவசாயிகளும் நுகர்வோரும் நிறைந்த பலன்களைப் பெற முடியும். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x