Published : 12 Oct 2020 06:49 AM
Last Updated : 12 Oct 2020 06:49 AM

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஆந்திர முதல்வர் புகார்: தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக ஆந்திர முதல் வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெறுகிறார். பணிமூப்பின் அடிப்படையில் அவருக்கு அடுத்து நீதிபதி என்.வி.ரமணா தலைமை நீதிபதியாக பதவியேற்க வேண்டும்.

இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா வுக்கு எதிராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அவர் விரிவான கடிதமும் எழுதியுள்ளார். 8 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம், விஜயவாடாவில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அதில், ‘தெலுங்கு தேசம் கட்சிக்கும் நீதிபதி ரமணாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசியல் முக்கியத்து வம் வாய்ந்த விவகாரங்களில் அந்த கட்சிக்கு ஆதரவாக நீதிபதி ரமணா காய் நகர்த்துகிறார். ஆந்திர உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நீதிபதி ரமணா தலையிடுகிறார். நீதித் துறையின் நடுநிலைத் தன்மையை தலைமை நீதிபதி உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் தரப்பில் அவரது முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், ‘ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 18 மாத ஆட்சியில் அரசு திட்டங்களுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றம் 100 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவுக்கு எதிரான ஆதாரங்களை தலைமை நீதிபதி பாப்டேவிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி என்.வி.ரமணா ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர், 2000 முதல் 2013 வரை ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2013 முதல் 2014 வரை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். கடந்த 2014 பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x