வெளிநாடுகளில் படிக்க இனிமேல் டாலர்களைச் செலவழிக்காதீர்கள்; தேசியக் கல்விக் கொள்கை இருக்கிறது: ரமேஷ் பொக்ரியால் பெருமிதம்

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் : கோப்புப்படம்
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் : கோப்புப்படம்
Updated on
1 min read

வெளிநாடுகளில் பட்டப்படிப்பு படிக்க ஆயிரக்கணக்கில் டாலர்களைச் செலவு செய்யத் தேவையில்லை. உலகத் தரம்வாய்ந்த திட்டங்களுடன் புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஐஐடி காரக்பூர் சார்பில் நேற்று மாலை இணையதளம் மூலம் கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:

''இந்த நாட்டில் வலுவான கல்வி முறையும், தரமான ஆராய்ச்சி வசதிகளும் இருக்கின்றன. ஆதலால், நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தேடிச் சென்று, ஆயிரக்கணக்கில் டாலர்களைச் செலவு செய்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நம்மிடம் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும், கல்விக்குத் தேவையான வசதிகளும் உள்ளன. புதிய தேசியக் கல்விக் கொள்கை உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதால், அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும். மாணவர்கள் இந்தியாவில் தங்கி உள்நாட்டிலேயே படிக்கலாம்.

இந்தியாவில் பல்கலைக்கழகங்களை அமைக்கக் கோரி, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கல்வி நிலையங்கள் அமைக்கவும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஆதலால், மாணவர்கள் இந்தியாவில் தங்கிப் படிக்கவும், இந்தியாவில் தங்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள்.

தேசியக் கல்விக் கொள்கையில் கிரெடிட் பேங் சிஸ்டம் உலகக் கல்வித் திட்டங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வியைச் சான்றிதழ், பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு என மூன்று பிரிவுகளில் படிக்கலாம்.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச தரத்துக்கு நமது உயர் கல்வி முறை வலுப்பெற உதவும்''.

இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in