

இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளில் சிலர் செய்ததைவிட, மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த 6 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டப் பணிகளைச் செய்துள்ளது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதன் மூலம் இடைத்தரகர்களுக்குத்தான் அதிகாரம் கிடைக்க வழி செய்கிறார்கள். எங்கள் அரசைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
கிராமங்களில் உள்ள மக்களின் வசதிக்காக ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் உரிமையாளர்களுக்குச் சொத்து அட்டைகளை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் சொத்துகளை வங்கியில் வைத்து எளிதாகக் கடன் பெற முடியும். மக்கள் தங்களின் மொபைல் போன் மூலம் வரும் லிங்க் மூலம் இந்தச் சொத்து அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறுவார்கள். உ.பி.யில் 346 கிராமங்கள், ஹரியாணாவில் 221, மகாராஷ்டிராவில் 100, மத்தியப் பிரதேசத்தில் 44, உத்தரகாண்டில் 50, கர்நாடகாவில் 2 கிராமங்கள் பயன்பெறும்.
இந்தத் திட்டத்தைக் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
“கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள், 60 ஆண்டுகளில் கிராமங்களுக்குச் செய்ததைவிட, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சி, 6 ஆண்டுகளில் ஏராளமான நலப்பணிகளைக் கிராமங்களுக்குச் செய்துள்ளது.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு, வீட்டுக்குக் கழிவறை, வீடு கட்டுதல், மின் இணைப்புத் தி்ட்டம், இலவச கேஸ் இணைப்புத் திட்டம் என ஏராளமான திட்டங்களைக் கிராமங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம். இதற்கு முன் நாட்டை ஆண்டவர்களால், கிராமப்புறங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன.
கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், உள்நாட்டுத் தயாரிப்பு வேண்டாம் என்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் எங்கள் அரசு அதிகாரத்தை வழங்கியுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் வழங்குகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. விவசாயிகளுக்காக அல்ல, இடைத்தரகர்களுக்காக, கமிஷன் ஏஜெண்டுகளின் நலனுக்காக எதிர்க்கிறார்கள். இந்த தேசத்தின் மக்கள் இந்த மோசடி வலையை அழிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் வெளிப்படைத் தன்மையுடன், ஒவ்வொருவரும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில் வளர்ச்சியை இந்த அரசு ஊக்குவித்து வருகிறது. சிலரின் அரசியலால் கிராமங்களில் உள்ள மக்கள் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிராமங்களிலும், மக்களிடையேயும் எப்போதும் பிரச்சினை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நாட்டைக் கொள்ளையடித்தவர்களை மக்கள் அங்கீகரித்தார்கள். அதனால்தான் தற்போது எதிர்க்கட்சியாக இருந்து, அரசைப் பற்றி பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்புகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் ஏழைகள், கிராமங்கள் குறித்துக் கவலையில்லை. நாங்கள் செய்யும் நல்ல பணிகள் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது. தேசம் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதை நிறுத்துவது அவர்களின் நோக்கம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.