

மகாராஷ்டிராவில் இருந்து வெளியாகும் மாத இதழ் ஒன்றில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேட்டி நேற்று வெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க முடியும் என நமது அரசமைப்பு சட்டம் கூறவில்லை. அதேபோல, இந்துக்களின் குரல்களுக்குதான் இங்கு மதிப்பளிக்கப்படும் எனவும் குறிப்பிடவில்லை. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் நாடாகவே இந்தியா விளங்குகிறது. இதுவே நமது சிறப்பம்சமாகும். வேறு எந்த நாட்டிலும் இந்த சிறப்பினை காண முடியாது. உதாரணமாக, பாகிஸ்தானில் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஆனால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இத்தகைய பாரபட்சங்களுக்கு என்றுமே இடம் கிடையாது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உலகிலேயே முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். இந்து மதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பெருந்தன்மையே இதற்குக் காரணமாகும். யாரையும் அடக்கி ஆளவும், அடிமைப்படுத்தவும் இந்துக்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.