

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வாழும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 'குடவா தக்' எனும் மொழியை பேசுகின்றனர். திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த இம்மொழியில் தமிழ், கன்னடம், பேரி, மலையாளம் ஆகிய மொழிகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகேயுள்ள பொல்லரிமாடியை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா (38)அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் மருத்துவராக பணியாற்றுகிறார். தன் மனைவியுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் சரத் பொன்னப்பா, பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக் தருண் சந்தீப் தேசாய் (32) என்பவரை கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தன் பாலின திருமணம் செய்து கொண்டார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் சரத் பொன்னப்பாவும், சீக் தருண் சந்தீப் தேசாயும் பஞ்சாபி, குடவா சமூகத்தின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். இந்தபுகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி குடகில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடவா சமாஜா தலைவர் கே.எஸ்.தேவய்யா கூறியதாவது:
கட்டுப்பாடுகள் நிறைந்த எங்கள் சமூகத்துக்கு வரலாற்று பெருமைகள் உள்ளன. இதை அறியாமல் இளம் தலைமுறையினர் சாதி, மதம், மொழி கடந்து திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தகைய திருமணங்களில் குடவா சமூகத்தின் பாரம்பரிய உடையணிய கூடாது என தடை விதித்திருக்கிறோம்.
குடவா சமூகத்திலே முதல் முறையாக ஒருவர் தன்பாலின சேர்க்கையாளருடன் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குடவா சமூகத்தின் பாரம்பரிய உடையணிந்து திருமணம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரை குடவா சமாஜத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். அவரை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்குமாறு அமெரிக்காவில் உள்ள 'குடவா கூட்டம்' அமைப்புக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம்.
இவ்வாறு கே.எஸ்.தேவய்யா கூறினார்.