Last Updated : 21 May, 2014 09:20 AM

 

Published : 21 May 2014 09:20 AM
Last Updated : 21 May 2014 09:20 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மனு தள்ளுபடி: இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அத‌ன் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பைரே ரெட்டி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பின் இறுதிவாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன் னிலையில் புதன்கிழமை தொடங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனு தள்ளுபடி

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சார்பாக கடந்த வாரம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அந்த மனுக்க‌ளை விசாரித்து தீர்ப்பளித்த‌ பிறகே மூல வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.

எனவே அவரது தீர்ப்பின் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனியார் நிறுவனங்களின் மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும். அந்த மனுக்களின் மீது தீர்ப்பு வெளியான பிறகே சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை தொடங்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டிருந்தது.

ஜெயலலிதா தரப்பு மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பைரே ரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும்,''பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட போது நீதிபதி டி'குன்ஹா தள்ளுபடி செய்தார். இந்த மனுவை தொடக்கத்திலே தள்ளுபடி செய்ய வேண்டும்'' என அவர் வாதிட்டார்.

இந்த மனு நீதிபதி பைரே ரெட்டி முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

“பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் போடப்படுகின்றன. எனவே எக்காரணம் கொண்டும் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது'' என மறுப்பு தெரிவித்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இன்று சசிகலா தரப்பு வாதம்

கடந்த 17 நாட்களாக தொடர்ந்த அரசு வழக்கறிஞரின் இறுதிவாதம் திங்கள்கிழமையுடன் முடிவடைந் தது. அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், சரவணன் ஆகியோர் 440 பக்க அளவில் தங்களுடைய இறுதிவாதத்தை எழுத்துபூர்வமாக நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

எனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் இறுதிவாதமும் தொடங்க இருக்கிறது. வழக்கில் முதல் எதிரியான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரின் தாயார் மறைந்து விட்டதால் அவருடைய வாதம் பின்னர் நடைபெறும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களுடைய இறுதிவாதத்தை புதன்கிழமை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x