Last Updated : 10 Oct, 2020 06:29 PM

 

Published : 10 Oct 2020 06:29 PM
Last Updated : 10 Oct 2020 06:29 PM

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

வெளிநாடுகளில் வசிக்கும், பணிக்காகச் சென்றிருக்கும் இந்தியர்கள் தங்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாக இருந்தால், அதைப் புதுப்பிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய உள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து, பணிக்காகச் சென்றுள்ள இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் அதைப் புதுப்பிக்க 1989, மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியர்கள் பலரின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டது. அங்கு அந்த உரிமத்தைப் புதுப்பிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள் எனும் தகவல்கள் பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்தது.

இதன்படி, 1989, மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், இந்தியர்கள் இந்தியத் தூதரகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் மத்திய நெடுஞ்சாலைதுறையின் வாகன் தளத்தின் மூலம் தாங்கள் சார்ந்துள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு புதுப்பித்துத் தரப்படும். இந்தத் திட்டத்தில் மருத்துவச் சான்றிதழ் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், விசா காலம் குறித்த விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

அதேசமயம், சில நாடுகள் இந்தியர்களுக்காக தங்கள் நாட்டுக்குள் வந்தபின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறையை வைத்துள்ளன. அதுபோன்ற நாடுகளில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க இயலாது. இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பாகவே ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்துச் செல்ல வேண்டும். இது தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x