நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள்

நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள்
Updated on
1 min read

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதாக இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறும்போது, “பந்த் மிகப்பெரிய வெற்றி என்றே நான் கூறுவேன். எதிர்பார்த்ததை விட பந்த் வெற்றிகரமாக நடைபெற்றது. தொழிலாளர்கள் வர்க்கத்தின் மிகப்பெரிய செயல்பாடு இது, மேலும் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான மிகப்பெரிய ஒற்றுமையான வெளிப்பாடு” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறும்போது, “மத்திய அரசு தொழிலாளர்கள் போராட்டத்தை தடுக்க முற்பட்ட போதிலும் இந்த பந்த் மிகப்பெரிய வெற்றியென்றே கருதுகிறோம். ஆர்.எஸ்.எஸ். சார்பான பாரதிய மஸ்தூர் சங் தவிர மத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள் எவரையும் போராட்டத்துக்கு எதிராக திருப்ப முடியவில்லை” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் போலீஸ் அடக்குமுறை:

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு, தொழிற்சங்கத் தலைவர்கள் மீது போலீஸைக் கொண்டு ‘கொலைவெறி’ தாக்குதல் நடத்தியதை கண்டித்த சிபிஎம், போராட்டக்காரர்களை கருணையின்றி அடித்து உதைத்து, கைது செய்து, அவர்கள் மீது பல பொய்வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளது.

ஆனாலும், இந்த அரச பயங்கரத்தை எதிர்கொண்டு மாநிலம் தழுவிய ஹர்த்தால் மேற்கு வங்கத்தில் நடந்தேறியது என்று சிபிஎம் கட்சி கூறியது.

"இந்த கண் திறப்பு போராட்டத்துக்கு அரசின் எதிர்வினை என்னவென்பதை பார்க்கக் காத்திருக்கிறோம், பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நீடிக்கும், இன்னும் பெரிய அளவில் செயல்பாடுகள் நடைபெறும்” என்று சுதாகர் ரெட்டி எச்சரித்தார்.

இந்த பந்தினால் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பந்த்தினால் போக்குவரத்து, வங்கி நடவடிக்கைகள், மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன.

விலைவாசியை கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார்மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in