

"அமெரிக்காவில் ஒரே ஓட்டலில் தங்கினாலும், பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இல்லை” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து, அமெரிக்காவில் பயணம் செய்கிறார். அயர் லாந்துக்கு நேற்றுமுன்தினம் சென்ற மோடி, அந்நாட்டு பிரதமர் என்டா கென்னியை சந்தித்து இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அயர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை நியூயார்க் வந்தடைந்தார் மோடி.
கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் அவரை இந்திய தூதர் அருண் கே சிங், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி, கான்சுல் ஜெனரல் தயானேஸ்வர் முலே ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நியூயார்க்கில் உள்ள ‘வால்டார்ப் அஸ்டோரியா’ ஓட்டலுக்கு சென் றார். அங்கு மோடியை அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
‘நிலைக்கத்தக்க வளர்ச்சி’ குறித்த மாநாட்டுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார். அத்துடன் வரும் 27-ம் தேதி ஐ.நா. சபையில் உயர்நிலைக் குழு நடக்கிறது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மாலை நியூயார்க் வருகிறார். மோடி தங்கியுள்ள ஓட்டலில்தான் ஷெரீப்பும் தங்குகிறார்.
இந்நிலையில், மோடி - ஷெரீப் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போதைய வரை இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் நிகழ்ச்சி ஏதும் இல்லை’’ என்றார்.
‘‘ஓட்டலில் இருவரும் சந்திக்காதபடி, தனித் தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்வரூப் பதில் அளிக்கையில், ‘‘ஓட்டலில் எதேச்சையாக இருவரும் சந்தித்து கைகுலுக்கினால் அதை நீங்களும்தான் பார்க்க போகிறீர்கள். எதிரெதிரில் சந்தித்து பேசாமல் போனாலும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’’ என்று கூறினார்.
பிரதமர் மோடி இன்று ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரபல நியூஸ் கார்ப் தலைவர் ரூபர்ட் முர்டோச் ஏற்பாடு செய்துள்ள ‘ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு’ பற்றிய மாநாட்டிலும் பங்கேற்கிறார். அதன்பின், 500 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
அதன்பிறகு, 26, 27-ம் தேதி களில் கலிபோர்னியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், கூகுள் புதிய தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரை மோடி சந்தித்து பேசுகிறார்.
அதன்பிறகு 28-ம் தேதி மீண்டும் நியூயார்க் திரும்புகிறார் மோடி. 28-ம் தேதி நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்துள்ள ‘அமைதி பாதுகாப்பு’ தொடர்பான மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அப்போது அதிபர் ஒபாமாவையும் சந்தித்து மோடி ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அன்றைய தினம் இரவு அல்லது 29-ம் தேதி அதிகாலை நியூயார்க்கில் இருந்து டெல்லி புறப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூயார்க்கில் மோடி தங்கியிருக்கும் போது, பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்ட் மற்றும் பூடான், சுவீடன், கயானா, சைப்ரஸ் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின் போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர மோடி வலியுறுத்துவார் என்றும் அதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களின் ஆதரவை பெறுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.