

தெலங்கானாவில் கரோனாவில் பாதிக்கப்பட்ட 87 சதவீதம் பேர் குணமடைந்து மீண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் இதுவரை 59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 85.81% ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல தெலங்கானாவிலும் கரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதம் பேருக்கு மேல் அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள தெலங்கானா அரசின் செய்தியிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
''தெலங்கானாவில் புதிதாக 1,811 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை 2.10 லட்சமாக அதிகரித்துள்ளபோதும் மாநிலத்தில் குணமடைந்தோர் விகிதம் 87% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இது 85.7 சதவீதமாக இருந்தபோதும் தெலங்கானாவைப் பொறுத்தவரை குணமடைந்தோர் விகிதம் 87.01% ஆக அதிகரித்துத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 9 ம் தேதி இரவு 8 மணி நிலவரத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று மேலும் ஒன்பது உயிரிழப்புகளுடன் கரோனா பலி எண்ணிக்கை 1,217 ஆக உயர்ந்துள்ளது.
அக்டோபர் 9 ஆம் தேதி 50,469 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 35 லட்சம். ஒரு மில்லியன் மக்களுக்கு சோதிக்கப்பட்ட மாதிரிகள் 94,046 ஆகும்.
அக்டோபர் 9 ஆம் தேதி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,072 ஆக இருந்தது, 1,811 பேருக்கு புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் 1.83 லட்சம் பேர். இவர்கள் தவிர 26,104 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தில் இறப்பு விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் இது தேசிய அளவில் 1.5 சதவீதமாக இருந்தது''.
இவ்வாறு தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.