ரூ.100 கோடியைக் கடந்தது; அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் குவிந்த நன்கொடை: பக்தர்கள் வசதிக்காக ‘ரோப் கார்’ திட்டம்

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி: கோப்புப்படம்
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி: கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும் 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த பூமி பூஜை முடிந்தபின், ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தர்கள், சாதி, மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளது என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், “ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டபின், இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் நன்கொடை பக்தர்களிடம் வந்துள்ளது.

ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. அவை இன்னும் வங்கியில் மாற்றப்படவில்லை. இதேபோல வெள்ளி மட்டும் 200 கிலோவுக்கும் அதிகமாக நன்கொடையாக வந்துள்ளன. இது தவிர விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.

ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. கோயிலில் பதிக்கப்படும் மார்பில் கற்கள் அனைத்தும் கோயில் பகுதிக்குள் கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 3 கிரேன்கள், 10 டிரக்குகள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அயோத்தி நகராட்சி ஆணையர் விஷார் சிங் கூறுகையில், “அயோத்தியில் நடந்துவரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பக்தர்கள் பார்ப்பதற்காக ரோப் கார் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம். இதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கோயிலுக்கு அருகே உள்ள ஒரு இடத்திலிருந்து தொடங்கி நகரில் உள்ள ஒரு மையான இடத்துக்கும் இடையே ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவி்த்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in