

தடைசெய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக ராமநாதபுரம், பெங்களூருவை சேர்ந்த இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில் பெங்களூருவை சேர்ந்த அப்துர் ரஹ்மான் அகமது என்ற மருத்துவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிரியாவுக்கு சென்றது, ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, இஸ்லாமிய இளைஞர்களை சிரியாவுக்கு அனுப்பியது தொடர்பான விவரங்கள் கிடைத்தன. அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அகமது அப்துல் காதா் (40), பெங்களூருவைச் சேர்ந்தஇர்பான் நசீர் (33) ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர்சென்னையில் வங்கியில் பணியாற்றியவாறு, ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல பெங்களூருவில் அரிசி வியாபாரம் செய்துவந்த இர்பான் நசீர் ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டி வழங்கியுள்ளார்.
அகமது அப்துல் காதர், இர்பான் நசீர் ஆகிய இருவரும் ஹிஸ்-உத்-தெஹ்ரிர் என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் ‘குர்ரான் வட்டம்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். அதன் மூலம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை விதைத்துள்ளனர். அதில் தேர்வு செய்யப்பட்டவர் களை பயிற்சிக்காக சிரியாவுக்குஅனுப்பியுள்ளனர். இவர்களில்சிலர் அங்குநடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 7-ம் தேதி அகமது அப்துல் காதர், இர்பான் நசீர் ஆகியோரின் வீடுகளில் நடத்திய சோதனையில் முக்கிய மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 2 பேரையும் பெங்களூருவில் உள்ள என்ஐஏ சிறப்புநீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினா். இருவரையும் என்ஐஏ காவலில் 10 நாட்கள் விசாரிக்க நீதிமன் றம் அனுமதி அளித்துள்ளது.