Published : 10 Oct 2020 08:38 AM
Last Updated : 10 Oct 2020 08:38 AM

உ.பி.யில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 700 உடல்களை தகனம் செய்த துப்புரவு தொழிலாளி

கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 700-க்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்து பாராட்டுகளைக் குவித்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னா.

உ.பி. மாநிலம் லக்னோவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி முன்னா (35). இவரிடம் கரோனா தொற்றால் இறந்தவர்களை தகனம் செய்யும் பொறுப்பு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. அதன்பின், கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பைகுநாத் தாம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்து வருகிறார். கரோனாவால் இறந்தவர்களின் உடலைத் தொடுவதற்கே பலர்பயந்த நிலையில், இவர் தானாகவே முன்வந்து அவர்களை தகனம் செய்துள்ளார். இவரதுபணிக்காக சமூக வலைதளங் களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து லக்னோ மாநகராட்சி மண்டல அதிகாரி திலீப் தே கூறியதாவது:

கரோனாவால் இறந்தவர்களை தகனம் செய்யும் பணிக்காக அழைக்கப்பட்ட போது முதலில் வந்தவர் முன்னாதான். கடந்த ஏப்ரல் முதல் இவர் 700-க்கும் மேற்பட்ட சடலங்களை தகனம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் முதல் முன்னாவும் அவரது குழுவினரும் இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. தினந்தோறும் கரோனாவால் இறந்த 12 முதல்17 பேரின் உடல்கள் தகனம்செய்யப்படுகின்றன. கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும், தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகளை அவர்களுக்கு நாங்கள் அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து முன்னா கூறியதாவது:

இந்தப் பணியைச் செய்ய கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ளேன். எனக்கு பாக்டீரியாவுக்கும், வைரஸுக்கும் வித்தியாசம் தெரியும். இந்தப் பணியால் எனக்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தும் நான் மனதார இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த 6 மாதமாக எனது குடும்பத்தாரை தூரத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். ஒருவேளை எனக்கு தொற்று ஏற்பட்டால் அது அவர்களுக்கும் பரவக் கூடாது. ஆனாலும் நான் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.

சில சமயம் உடல்களை தகனம் செய்ய கால தாமதம் ஏற்படும் போது சிலர் எங்களை திட்டுகிறார்கள். ஆனாலும் நாங்கள் கோபப்படுவதில்லை. கோபத்தை கட்டுப்படுத்த எங்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு முன்னா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x