

டெல்லி மாளவியா நகரில் 80 வயது முதியவர் காந்தா பிரசாத், 'பாபா கா தாபா' என்ற பெயரில் தகர கொட்டகையில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவி பதாமி தேவியும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஓட்டலை நடத்தி வருகின்றனர். கரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் கடந்த சில மாதங்களாக ஓட்டல் வெறிச்சோடியது. வாடிக்கையாளர்கள் வரவில்லை. வருமானம் இல்லை. முதிய தம்பதியரை வறுமை வாட்ட தொடங்கியது. ஆனாலும் அவர்கள் ஓட்டல் தொழிலை கைவிடவில்லை. கணவனும் மனைவியும் நாள்தோறும் ஓட்டலை திறந்துவைத்து, வெறுங்கையோடு வீடு திரும்பி வந்தனர்.
கடந்த 7-ம் தேதி கவுரவ் வாசன் என்ற தன்னார்வ செய்தியாளர், முதியவர் காந்தா பிரசாத்தின் ஓட்டலுக்கு சென்றார். சுவையான உணவு வகைகள், பிரபல ஓட்டல்கள் குறித்த செய்திகளை திரட்டி சமூக வலைதளங்களில் வெளியிடும் அவர், காந்தா பிரசாத் நடத்தி வரும் 'பாபா கா தாபா' ஓட்டலின் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்தார். ஓட்டல் உணவு வகைகள் குறித்தும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்து அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.
வீடியோவில் முதியவர் காந்தா பிரசாத்தின் அழுகையை கண்ட டெல்லி மக்கள் நேற்று முன்தினம் காலை 'பாபா கா தாபா' தகர கொட்டகை ஓட்டல் முன்பு பெருந்திரளாக குவிந்தனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை காந்தா பிரசாத்தும் அவரது மனைவி பதாமி தேவியும் எதிர்பார்க்கவில்லை.
பாபா கா தாபாவில் நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பருப்பு, குழம்பு, சாதம், ரொட்டி என அனைத்து வகையான உணவு வகைகளும் காலையிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
கரோனாவால் வருமானத்தை இழந்து பரிதவித்த முதிய தம்பதியர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதுகுறித்து காந்தா பிரசாத் கூறும்போது, "கடந்த 1970-களில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்தேன். முதலில் டீ கடை நடத்தினேன். பின்னர் ஓட்டல் வைத்தேன். சிறிய ஓட்டல் என்றாலும் வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் கிடைத்தது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக சில மாதங்கள் வியாபாரம் இல்லை. சமூக வலைதளங்கள் மூலமாக எங்கள் நிலையை அறிந்த மக்கள் பணம், காசோலைகளை வழங்கியுள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களோடு இருப்பதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.
முதியவரின் ஏழ்மை நிலையை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவுரவ் வாசன் கூறும்போது,"பாபா கா தாபா ஓட்டலுக்கு வந்தபோது ரூ.500-க்கும் அதிகமாக செலவு செய்து உணவு வகைகளை தயார் செய்திருந்தனர். ஆனால் ரூ.70-க்கு மட்டுமே வியாபாரம் நடந்திருந்தது. சமையல், உணவு வகைகள் தொடர்பாக இதுவரை எத்தனையோ வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் பாபா கா தாபா வீடியோ உலகம் முழுவதையும் சென்றடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் 'பாபா கா தாபா' ஓட்டல் வீடியோவை பார்த்துள்ளனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், நடிகர்கள் சுனில் ஷெட்டி, ரன்தீப் ஹூடா, நடிகைகள் ரவீணா தாண்டன், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட ஏராளமான பிரபலங்கள் முதியவர் காந்தா பிரசாத்தின் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.