

சாதி மனப்பான்மை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பகுஜன் கட்சியை நிறுவிய கன்ஷிராமின் நினைவு தினம் புதுடெல்லியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உ.பி.யின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"எனது கட்சி எப்போதுமே சொந்த சமூகம் மற்றும் சொந்த மக்கள் ஆகியவற்றின் நிதி ஆதரவைப் பெற்றே இயங்கி வருகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் பிற கட்சிகள் போன்ற முதலாளிகளிடமிருந்து பெற்று அல்ல. இல்லையெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்தும் நிலைதான் ஏற்படும்.
அம்பேத்கர் மற்றும் கன்ஷிராம் காட்டிய பாதையின்படி கட்சியை நடத்துவதற்கு நமது சொந்த சமூகத்திடமிருந்தே ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவியைப் பெற்று வருகிற ஒரு கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் செயல்பட்டு வருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் திட்டமிட்டு தவறாக பிரச்சாரம் செய்துவருகின்றன.
பின்தங்கிய மக்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிற வர்க்கங்களுக்கும் அதிகாரத்தை வழங்க விரும்பியவர் கன்ஷிராம். இதனால் அவர்கள் சுய மரியாதையுடன் வாழ முடியும் என்று அவர் விரும்பினார்.
அரசியலமைப்பில் நம் மக்களுக்குத் தேவையான உரிமைகளை அம்பேத்கர் வழங்கியுள்ளார். ஆனால், நாம் உரிய நன்மைகளைப் பெற வேண்டுமெனில், நம் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த அரசியல் கட்சி மூலமாக அரசாங்கத்தின் பிரதான சாவியைக் கையில் எடுக்க வேண்டும்.
ஆனால், இங்குள்ள கட்சிகளும் அவற்றின் அரசாங்கங்களும் நினைத்தால் நம் கட்சிக்குள் இயங்கும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது அழுத்தம் கொடுக்கலாம். அவர்களைச் செயலற்றவர்களாக மாற்றவும் சதி செய்யலாம்.
முக்கியமாக சாதி மனப்பான்மை, முதலாளித்துவ மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் கட்சிகள் தவறான நோக்கில் பிரச்சாரம் செய்துவருகின்றன. அவர்களுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் கட்சியை வலுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாம் இதற்காக பயப்பட வேண்டியதில்லை. அத்தகைய சூழ்நிலையில் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
பீம் ஆர்மி போன்ற கட்சிகள் தலித் வாக்குகளைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்டவை. பேராசை கொண்டவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் வாய்ப்புகளைத் தடுக்க தங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் பார்க்கின்றன.
பாபா சாஹேப்பின் பணி என்ற பெயரில், எதிரிகளால் அமைக்கப்பட்ட பிற அமைப்புகளும் கட்சிகளும் ஒவ்வொரு மட்டத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி இயக்கத்தை பலவீனப்படுத்த முயல்கின்றன.
நமது விழிப்புணர்வு காரணமாக, அவர்களால் இதுவரை எந்த வெற்றிகளையும் பெற முடியவில்லை. இதற்காக எனது 'வர்க்கம்' குறித்து நான் பெருமைப்படுகிறேன்''.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.