Published : 09 Oct 2020 09:07 AM
Last Updated : 09 Oct 2020 09:07 AM

பிரதமர் மோடிக்காக விமானம் வாங்கிய ரூ.8,400 கோடியில் எல்லையில் வீரர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கியிருக்கலாமே: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி 

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க இரு விமானங்கள் வாங்கப்பட்ட ரூ.8,400 கோடிக்கு சியாச்சின், லடாக் எல்லையில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் ரூ.8,400 கோடியில் வாங்கப்பட்டன.

'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் போயிங் நிறுவனம் இந்த விமானத்தில் உருவாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விமானங்களுக்கு 'ஏர் இந்தியா ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை 'பறக்கும் கோட்டை' என்று வர்ணிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தி நாளேடு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், எல்லையில் பனிப்பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஜாக்கெட், ஷூ, குளிருக்கான ஆடைகள் வாங்குவதற்கு மத்திய அரசு தாமதம் செய்ததாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார் என்று தெரிவித்திருந்தது.

இந்தச் செய்தியைஅடிப்படையாக வைத்து சியாச்சின், லடாக் எல்லையில் உண்மை நிலையை அறிய வேண்டும், அங்கு செல்ல அனுமதிக்கக் கோரி, மக்களவைத் தலைவரிடம் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவினர் அனுமதி கோரினர். அதற்கு அனுமதி இதுவரை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இதனை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “விமானம் வாங்குவதற்காக பிரதமர் மோடி ரூ.8,400 கோடி செலவு செய்துள்ளார். ஆனால், சியாச்சின், லடாக் எல்லையில் தேசத்தைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை விமானம் வாங்கப்பட்ட தொகையில் வாங்கியிருக்கலாம்.

குளிருக்கான 30 லட்சம் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை , 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூக்கள், 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானம் வாங்கிய தொகையில் வீரர்களுக்காக வாங்கியிருக்கலாம். பிரதமர் மோடி தன்னுடைய தோற்றத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார். ராணுவ வீரர்களைப் பற்றிய கவலை அவருக்கில்லை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டரில் ராகுல் காந்தி குஷன் இருக்கையில் அமர்ந்திருந்ததை பாஜக விமர்சித்திருந்தது. அதற்குப் பதிலடியாக, மத்திய அரசு வாங்கிய விவிஐபி விமானங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஆனால், மத்திய அரசு வாங்கியுள்ள விவிஐபி விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் அளிக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x