ஏழுமலையானுக்கு ரூ.2 லட்சம் கோடி அசையா சொத்துகள்: 10 ஆயிரம் கோடி வங்கி டெபாசிட், தினந்தோறும் அதிகரிக்கும் காணிக்கைகள்

ஏழுமலையானுக்கு ரூ.2 லட்சம் கோடி அசையா சொத்துகள்: 10 ஆயிரம் கோடி வங்கி டெபாசிட், தினந்தோறும் அதிகரிக்கும் காணிக்கைகள்
Updated on
1 min read

உலகின் பணக்கார கடவுள் என்று கூறப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. அவரது பெயரில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், விலை மதிப்பில்லா வைரம், வைடூரியம், மரகதம் போன்ற வற்றால் செய்யப்பட்ட ஆபர ணங்கள் மற்றும் நிலங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

மேலும் தற்போது, தொழிலதிபர்கள் முதல் சாமானிய பக்தர்கள் வரை காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருமலைக்கு வாகனப் பாதைகள் அமைக்கப்பட்ட பின் பக்தர்கள் எண்ணிக்கை பெருகியதுடன் அவர்கள் செலுத்தும் காணிக்கையும் பன்மடங்கு பெருகியுள்ளது.

ஏழுமலையானின் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் சிலர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்பேரில் கடந்த 2009-ம் ஆண்டு ஏழுமலையானின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை உயர் நீதிமன்றத்தில் திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.

6 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்த இந்த சொத்து விவரத்தில், ஏழுமலையானுக்கு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் மொத்தம் 4,143.67 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் உள்ளன.

இதன் மதிப்பு ரூ. 33,447.74 கோடியாக மதிப்பிடப்பட்டது. இந்த சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் காசோலைகளை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இவை தற்போது ரூ.10 ஆயிரம் கோடியாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 744 கோடி வட்டி கிடைத்து வருகிறது.

இந்த வட்டியில் நித்ய அன்ன பிரசாத திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1933-ம் ஆண்டில் தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட் லட்சக்கணக்கில் மட்டுமே இருந்தது. ஆனால் 2015-16-ம் ஆண்டில் இது ரூ.2,530 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் ஆகும்.

2.14 கோடி பக்தர்கள்

கடந்த 2010-ம் ஆண்டில் 2.14 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இதுவே இந்த 2015-ம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 1.5 கோடி பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in