ஹாத்ரஸ் தலித் பெண் தனது குடும்பத்தாரால் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார் –சிறையில் இருந்து குற்றம்சாட்டப்பட்டோர் எழுதிய கடிதம்
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் கூட்டு பலாத்காரம் செய்து தலித் பெண் பலியான வழக்கிள் குற்றம்சாட்டப்பட்டோர் சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளனர். மாவட்ட எஸ்பிக்கான இக்கடிதத்தில் அத்தலீத் பெண் தனது குடும்பத்தாரால் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 இல் உ.பியின் ஹாத்தரஸில் சண்ட்பா கிராமத்து 19 வயது தலீத் பெண் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளானார். தொடர்ந்து தாக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதில் பலனின்றி டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29 இல் அப்பெண் பலியானார். இவ்வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சந்தீப், ரவி, லவ்குஷ் மற்றும் ராமு என்கிற ராம் குமார் ஆகிய உயர் சமூகத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பியின் சிறப்பு படையினரால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு தற்போது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார் மீது புதிய புகார் கிளம்பியுள்ளது. இவர்களால் அப்பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதை குறிப்பிட்டு, சிறையில் இருக்கும் சந்தீப் எழுதிய கடிதம் போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அவருடன் சிறையில் இருக்கும் மற்ற 3 தாக்கூர் சமூகத்தினரும் தம் கைரேகை, கையெப்பங்களுடன் ஹாத்தரஸ் மாவட்ட எஸ்பிக்கு எழுதியுள்ளனர்.
இதில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் நால்வர் மீதும் பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டு சிறை செய்யப்பட்டுள்ளது. பலியான இப்பெண்ணுடன் எனக்கு இருந்த நட்பின் காரணமாக கைப்பேசியிலும் சில சமயம் பேச்சுவார்த்தை நடந்தது உண்டு.
எங்களின் இந்த நட்பில் அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. சம்பவத்தன்று அப்பெண்ணுடன் எனக்கு வயல்வெளியில் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவருடன் இருந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரரின் பேச்சை கேட்டு நான் அங்கிருந்து எனது வீடு திரும்பி விட்டேன். வீட்டில் எனது தந்தையுடன் கால்நடைகளை குளிப்பாட்டும் பணியின் இருந்தேன்.
அப்போது, கிராமத்தாரால் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில் என்னுடன் இருந்த நட்பை கண்டித்து அப்பெண்ணை அவரது தாயும், சகோதரரும் அடித்து படுகாயப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இதனால், அப்பெண் பிறகு பரிதாபமாகப் பலியாகி விட்டார். ஆனால், நான் அப்பெண்ணுடன் எப்போதும் தவறாக நடந்து கொண்டதில்லை.
இவ்வழக்கில் என்னுடன் சேர்த்து மற்ற மூவரையும் அப்பெண்ணின் வீட்டார் பொய் புகார் செய்து சிறையில் தள்ளி விட்டனர். நாம் அனைவரும் நிரபராதிகள்.
இப்பிரச்சனையில் முறையான விசாரணை செய்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் வீடு மற்றும் ஹாத்தரஸின் முக்கிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் நடவடிக்கையை கண்காணிக்க உ.பி அரசு செய்திருப்பதாகவும் புகார் கிளம்பியுள்ளது.
