கரோனா காரணமாக மைசூரு தசராவை எளிமையாகக் கொண்டாட முடிவு: அரண்மனை நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்குத் தடை

மைசூரு தசரா
மைசூரு தசரா
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை எளிமையாகக் கொண்டாட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் லட்சக்கணக்கில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு தசரா விழா வரும் 17‍-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது.

தற்போது மைசூரு, பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கர்நாடகாவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஜம்பு சவாரி (யானை) ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகளைத் த‌விர்த்து பிற நிகழ்ச்சிகள் அனைத்தைம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரு நகர் முழுவதும் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மைசூரு அரண்மனையின் மகாராணி பிரமோத தேவி, ''கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு மைசூரு அரண்மனையில் நடக்கும் தசரா சம்பிரதாய, சடங்குகளை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அர்ச்சகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைசூரு மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in