கேரளாவில் மேலும் இரு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று: அமைச்சரவையில் இதுவரை 5 பேர் பாதிப்பு

மின்துறை அமைச்சர் எம்.எம்.மாணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் |  படம் உதவி: ட்விட்டர்
மின்துறை அமைச்சர் எம்.எம்.மாணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் | படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

கேரள மாநிலத்தைக் கரோனா வைரஸ் உலுக்கி எடுத்து வரும் நிலையில், அங்கு மேலும் இரு அமைச்சர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரள அமைச்சர்கள் எம்.எம்.மாணி, கே.டி.ஜலீல் ஆகியோருக்குக் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கிறது. நாள்தோறும் புதிதாக ஆயிரக்கணக்கானோருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதுவரை கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.53 லட்சமாக உயர்ந்துள்ளது. 93 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 940 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு, அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ஈ.பி.ஜெயராஜன், வி.எஸ்.சுனில் குமார் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் நேற்று இரு அமைச்சர்கள் பாதிக்கப்பட்டனர்.

மின்துறை அமைச்சர் எம்.எம்.மாணி, உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் ஆகியோருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

75 வயதாகும் மின்துறை அமைச்சர் மாணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவில், “எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.எம்.மாணி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். கே.டி.ஜலீல், அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in