

புதுடெல்லி: இந்த ஆண்டு முதல் முறையாக நாடு முழுவதும் உள்ள 11 மண்டலங்களில் செயற்குழு கூட்டத்தை நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழு கூட்டம் ஏதாவது ஒரு இடத்தில் தீபாவளி பண்டிகை ஒட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 11 மண்டலங்களில் செயற்குழு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
வரும் அக்டோபர் 27 முதல் டிசம்பர் 6 வரையில் பாலக்காடு, ஹைதராபாத், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூர், பிரயாக்ராஜ், பாட்னா, குவாஹாட்டி, குருகிராம், காஸியாபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இக்கூட்டம் நடைபெறும். இந்த அனைத்து கூட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி ஆகிய இருவரம் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில், கரோனா வைரஸ் மற்றும் அதன் தாக்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.