Last Updated : 08 Oct, 2020 07:38 AM

 

Published : 08 Oct 2020 07:38 AM
Last Updated : 08 Oct 2020 07:38 AM

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் மர்மமான முறையில் மரணம்

மத்தியப் புலனாய்வுக் கழகமான சிபிஐ-யின் முன்னாள் இயக்குநரும், நாகாலாந்து மாநில முன்னாள் கவர்னருமான அஷ்வனி குமார் சிம்லாவில் தன் இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1973 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஷ்வனி குமார் 2008ம் ஆண்டு சிபிஐ இயக்குநர் ஆனார். ஆருஷி தல்வார் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில் விஜய் சங்கர் என்பவருக்கு அடுத்தபடியாக சிபிஐ இயக்குநர் பதவியேற்றவர் அஷ்வனி குமார். பின்னால் மன்மோகன் சிங் அரசால் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார், பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

சிம்லாவில் உள்ள தனியர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகவும் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை 7 மணியளவில் இவர் இறந்து கிடந்தது தெரியவந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார், மாவட்ட போலீஸ் அதிகாரி இதனை தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இவரது உடல் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 1985-ல் சிம்லா டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி)யில் 1990 வரை பணியாற்றினார்.

2008-ல் சிபிஐ இயக்குநரான இவர் 2010-ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு எம்.பி.ஏ பாடங்கள் நடத்தி வந்தார்.

மார்ச் 2013 முதல் ஜூலை 2014 வரை நாகாலாந்து கவர்னராகவும் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னராகவும் இருந்தார்.

இவரது மர்ம மரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அஷ்வனி குமார் மரணத்துக்கு முன்னால் எழுதி வைத்த குறிப்பும் கிடைத்துள்ளதாக உள்ளூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் பிடிஐ ஏஜென்சியிடம் கூறும்போது, வழக்கம் போல் நேற்று மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டார், வீடு திரும்பியவுடன் அவர் தூக்கிட்டு கொண்டதாக தெரிவித்தார்.

அஷ்வனி குமாருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x