

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இணைய பாதுகாப்புத் துறையில் திறன் மேம்படுத்துதல், முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாத்தல், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல் மற்றும் இணைய வழிக் குற்றங்களை தடுப்பதற்கான வழி முறைகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றை இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்திற்கேற்ப மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், வர்த்தகத் துறையின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பு மற்றும் நம்பகமான இணைய சுற்றுச் சூழலை உருவாக்க இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் உறுதி பூண்டுள்ளன.
இந்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் உட்பட உலக அரங்கில் இணைந்து செயல்படவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வியூகங்களைப் பகிரவும், அரசு மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு இடையே பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுதவும், இணைய ஆளுமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளன.