Published : 07 Oct 2020 02:19 PM
Last Updated : 07 Oct 2020 02:19 PM

ஹாத்ரஸ் விவகாரம்: பலியான பெண் குற்றம்சாட்டப்பட்டவரைக் காதலித்தார்: அந்த 4 பேரும் நிரபராதிகள்- உ.பி. பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

ஹாத்ரஸ் விவகாரத்தில் பலதரப்பட்ட கருத்துகளையும் கூறி எது உண்மை என்று அறிய முடியாதவாறு பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் வைத்து வரும் வேளையில் உத்தரப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை பற்றி கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

உ.பி. பாரபங்க்கியை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா, 4 பேரினால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு பலியான பெண், குற்றம்சாட்டப்பட்டவரில் ஒருவரை காதலித்து வந்தார் என்று கூறியதோடு ‘அந்தப் பெண் நடத்தைக் கெட்டவர் என்று பேசியது புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இந்தியில் கூறும்போது, அந்த பெண் குற்றம்சாட்டப்பட்டவரைக் காதலித்தா, இதை ஊரே அறியும். சமூகவலைத்தளம், செய்தி சேனல்களில் வந்தது. அந்தப் பெண் கையும் களவுமாக மாட்டியிருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட பெண்கள் எங்காவது இறந்து கிடப்பார்கள். கரும்புத் தோட்டம், புதர்கள், வேறு வயல்வெளிகள், காட்டுப்பகுதிகள் என்று இறந்து கிடப்பார்கள். ஏன் இத்தகைய பெண்கள் நெல் வயலிலோ, கோதுமை வயலிலோ இறந்து போவதில்லை?.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை கைது செய்த நால்வரையும் விடுவிக்க வேண்டும். உத்தரவாதமாகக் கூறுகிறேன் அந்த நால்வரும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்காவிட்டால் அவர்கள் மன ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களது இழந்த இளமையை யார் கொடுப்பார்கள்? அரசு இவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமா?’ என்று பேசியதாக இந்தியா டுடே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவரின் இத்தகைய பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தார். ரேகா சர்மா தன் ட்விட்டரில், “இவர் எந்தக் கட்சியின் தலைவர் என்று கூறுவதற்கும் அருகதையற்றவர், அவரிடம் ஒரு புளித்துப்போன நோய்க்கூறான பழைமையான மனநிலைதான் உள்ளது. நான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x