ஷாகின் பாக் போராட்டக்காரர்கள் பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் போன்ற பொது இடங்களைப் போராட்டக்காரர்கள் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதேசமயம் ஜனநாயகம் மற்றும் எதிர்ப்பு இரண்டுமே கைகோத்துச் செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

குறிப்பாக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் 2020 மார்ச் 24-ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடந்தன.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று போராட்டக்காரர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

ஷாகின் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் ஷாகினி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது" என விசாரணையின்போது கருத்துத் தெரிவித்தது.

மேலும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்தது. இந்தக் குழுவினர் கடந்த போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட விவரங்கள் குறித்து தங்களின் அறிக்கையை குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 21-ம் தேதி முடிந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

“ஜனநாயகமும், எதிர்ப்பும் கைகோத்துச் செல்ல வேண்டும். டெல்லி ஷாகின் பாக் போன்ற பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. இதுபோன்ற போராட்டங்களை நாங்கள் ஏற்க முடியாது.

ஷாகின் பாக் மட்டுமல்ல எந்தப் பொது இடத்தையும் காலவரையின்றி போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தும்வரை நாங்கள் ஏற்க முடியாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம். ஆதலால், ஷாகின் பாக் பகுதியில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் இடையூறு ஏற்படுத்துதல், மற்ற குடிமக்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும். இது சட்டத்தால் அனுமதிக்கப்படவில்லை.

அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால், போராட்டம் நடத்துவதற்கு எனத் தனியாக இடம் இருக்கிறது. அங்கு நடத்தலாம்.

சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்துவதையும், போராட்டம் நடத்தும் உரிமை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையையும் நாங்கள் சமநிலையில் வைக்க விரும்புகிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது, நாடாளுமன்றத்துக்குள்ளும், சாலையிலும் இருக்கலாம். சாலையில் நடத்தும் போராட்டமாக இருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in