

சபரிமலை ஐயப்பன் கோயிலி்ல் நவம்பர் 16-ம் தேதி தொடங்க உள்ள மண்டல பூஜையின் போது நாள்தோறும் ஆயிரம் பக்தர்களையும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க கேரள அரசுக்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 48 மணிநேரத்துக்கு முன்பு ஆன்-லைனில் கரோனா நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகிறது டிசம்பர் 26-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் மகரவிளக்கு பூஜை தொடங்கி 2021, ஜனவரி 14-ம் தேதிவரை நடக்கிறது.
கேரள மாநிலத்தில் தற்போது கரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பக்தர்களை அனுமதிப்பது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கேரள அரச குழு அமைத்தது.
தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான குழுவில் தேவஸம்போர்டின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
நவம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கும் மண்டபூஜை, மகரவிளக்கு சீசனுக்கு கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கரோனா காலத்தில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த வழிமுறைகளை வகுத்து கேரள அரசிடம் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா நேற்று தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை அளித்தார்.
அந்த பரிந்துரையில், " மண்டல பூஜையின் போது நாள்தோறும் ஆயிரம் பக்தர்களையும், வார இறுதி நாட்களில் 2ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்கலாம் .
தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக தரிசனத்துக்கு முன்பாக ஆன்-லைனில் தங்களின் கரோனா நெகெட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சபரிமலையில் தரிசனம் செய்ய 10 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் மட்டுமே அனுமதி்க்கப்படுவார்கள். 60 வயது முதல் 65 வயதுள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்கள் உடல்நிலையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று மருத்துச் சான்றிதழை வழங்கினால்மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக மண்டபூஜை, மகரவிளக்கு பூஜைக்கு 5 ஆயிரம் பக்தர்களை வரை அனுமதி்க்கலாம் " எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் “ சபரிமலை கோயிலின் தந்திரியுடனும், கோயில் நிர்வாககிளுடனும் ஆலோசனை நடத்தியபின்புதான், ஆன்-லைன் தரிசனம் குறித்து முடிவு எடுக்கப்படும். நவம்பர் மாதத்திலிருந்து 2 மாதங்களுக்கு நடக்கும் மண்டலபூஜை, மகரவிளக்கு சீசனை எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்ல அரசு விரும்புகிறது.
சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தரிசனத்துக்கு முன்பாக, www.covid19jagratha.kerala.nic.in எனும் இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, அதில் தரிசனத்துக்கு 48 மணிநேரத்துக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருதி, பம்பா, நிலக்கல் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
பக்தர்கள் மலைப்பாதை வழியாகச் செல்லவும், பம்பா நதியில் நீராடவும் அனுமதியில்லை. பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்த அதே நெய் வழங்க முடியாது.
பக்தர்களுக்கு ஆன்-லைனில் எவ்வாறு வரிசை என் தரப்பட்டுள்ளதோ அதன்படியான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முடிந்தவரை மலையாள மாதத்தில் அதிகமான நாட்களை கோயிலை பக்தர்களுக்காக திறந்துவைக்க நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.