

ஹாத்ரஸ் மாவட்டத்தில் தலீத் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு சிகிச்சைப் பலனின்றி பலியான சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு அமைத்த 3 நபர் சிறப்பு விசாரணைக்குழு தங்கள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலர் பகவான் ஸ்வரூப் தலைமையில் செப்டெம்பர் 30ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முதலில் 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கித் தாக்கல் செய்ய பணிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு உத்தரப் பிரதேச அரசு பிற்பாடு சிபிஐ விசாரணை கோரியது. பிறகு ஹாத்ரஸ் விவகாரத்தை வைத்து பெரிய சாதிக்கலவரத்தை தூண்டும் சதி நடப்பதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அப்படி நடந்தால், ‘சுயநலமிகளும், அரசியல் ஆதாயம் தேடும் கும்பலும் போலி, தவறான செய்திகளை மறைமுக நோக்கங்களுக்காக உருவாக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது,
காலநீட்டிப்புக்கான காரணம், ‘விசாரணை முழுமையடையவில்லை’ என்பதே என்று உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் உ.பி.போலீஸ் எரித்ததாக கடும் விமர்சனங்களை யோகி அரசு சந்தித்து வருகிறது.
ஆனால் குடும்பத்தினர் விருப்பப்படியே உடலை எரித்ததாக உ.பி. போலீஸ் தெரிவித்தது.
மேலும் எஃப்.எஸ்.எல். அறிக்கை பலாத்காரம் நடக்கவில்லை என்று கூறியதாகக் கூறும் உ.பி. அரசு, இந்த விவகாரத்தை பெரிதாக்கி சாதிக்கலவரத்தைத் தூண்டி விட முயற்சி நடப்பதாக சதிக்கோட்ப்பாடு ஒன்றை எடுத்து வெளியே விட்டது.
உச்ச நீதிமன்றத்திலும் உத்தரப் பிரதேச அரசு பற்றி அவதூறு கிளப்புவதற்கான முயற்சியில் அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் வெளியிடப்படுவதாக யோகி ஆதித்யநாத் அங்கலாய்த்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கூர் சமூகத்தைக் காக்கவே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று அங்கு சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.