

மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்கவத்தின்(ஏஎஸ்ஐ) முதுநிலை பட்டயப்படிப்பில்(பி.ஜி டிப்ளமோ) தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பியான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் ஏஎஸ்ஐயின் ‘பண்டித் தீன்தயாள் உபாத்யா கல்வி நிறுவனம்’ அமைந்துள்ளது. இதில், தொல்லியல் சம்மந்தப்பட்ட பல்வேறு வகை பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒன்றான 2 வருட முதுநிலை பட்டயப்படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கானத் தகுதியாக வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளில் முதுநிலையான எம்.ஏ முடித்திருக்க வேண்டும்.
இதுவன்றி, செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பெர்ஷியன் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித்துறைகளில் பயின்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. குறிப்பாக மிகவும் பழமையான மொழியான தமிழில் தான் கல்வெட்டுக்களும் அதிகம் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் கூறும்போது, ‘செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற பாடப்பிரிவுகள் எனக் கூறி விட்டு அதில் தமிழுக்கு இடமளிக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மிக அதிகமாக தொல்லியல் சின்னங்கள் கிடைத்து வரும் வேளையில் இது, அத்துறையில் தமிழர்கள்
நுழையத் தடை விதிக்கும் முயற்சியாகும். இதை கண்டித்து நான் மத்திய கலாச்சாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.
வரும் 2020-21 முதல் 2021-22 ஆகிய கல்வியாண்டுகளுக்கான இந்த முதுநிலை பட்டயப்படிப்பு இரண்டு வருடங்களுக்கானது. மொத்தம் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்படும் இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நவம்பர் 8, 2020.
இதன் நேர்முகத்தேர்வு நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முடித்தவர்களுக்கு ஏஎஸ்ஐயின் அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களாகப் பணியாற்றலாம்.
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பட்டயப்படிப்பில் இதற்கு முன்பும் தமிழில் எம்.ஏ பயின்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதில்லை. எனினும், தற்போதைய விளம்பரத்தில் செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற மொழிகள் எனக் குறிப்பிட்டு விட்டு அதில் தமிழுக்கு இடம் இல்லாதது சர்சையில் கிளப்பியுள்ளது.