

ஹைதராபாத்தில் உள்ள பஷீராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சூதாட்டம் நடத்துவதற்காக மொபைல் செயலிகள் தயார் செய்ததை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட சுஷாந்த் உட்பட 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.22.89 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸாரின் நடவடிக்கையை தொடர்ந்து சூதாட்ட கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை போலீஸார் முடக்கி வைத்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் பகுதியில் இதுவரை சுமார் ரூ.730 கோடி அளவில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக பலர் கடன் வாங்கி பணத்தை இழந்திருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சைபராபாத் காவல் துறை ஆணையர் சஜ்ஜனார் வலியுறுத்தியுள்ளார்.