Published : 07 Oct 2020 07:04 AM
Last Updated : 07 Oct 2020 07:04 AM

பிரதமருடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: கிருஷ்ணா - கோதாவரி பிரச்சினை குறித்து அமைச்சருடன் பேச்சு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்துப் பேசினார். உடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் வி.விஜய சாய் ரெட்டி.

அமராவதி

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து, கிருஷ்ணா கோதாவரி நதி நீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில பிரச்சினைகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தருவது குறித்து விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினார். 40 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போலவரம் அணைக்கட்டு, கடப்பா எஃகு தொழிற்சாலை, மாநிலப் பிரிவினையின்போது அறிவிக்கப்பட்ட நிதி
ஒதுக்கீடு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

போலவரம் அணைக்கட்டுகாக நிலுவைத் தொகையான ரூ.10,000 கோடியில் 3,250 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்
துள்ளது. எனவே, மீதமுள்ள நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதன்பிறகு நடைபெற்ற காணொலி ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருடன் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இந்த கூட்டத்தில் இரு மாநிலத்துக்கும் உறுதி அளித்தார்.

சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தன் மீது தொடரப்பட்டுள்ள சிபிஐ வழக்கில் இருந்து வெளி வருவதற்காகவே டெல்லிக்கு சென்று ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தியதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பலவீனமாக உள்ளதன் காரணமாக, பலம் பொருந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள பாஜக முயன்று வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x