

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அவரை 'வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்' என விமர்சித்துள்ளது.
மேலும், கடந்த 15 மாதங்களில் 29 முறை வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் மேற்கொண்டுள்ளார் என்றும், அதனால் என்ன பயன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பயன்? பொதுமக்கள் வரிப் பணத்திலிருந்து ரூ.200 கோடி விரயம் ஆனது மட்டுமே மிச்சம். ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் 29 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் 3.5 மாதங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்டிருக்கிறார்.
இதுபோதாது என்று நமது 'வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர் மோடி' தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு செல்பி எடுத்துக்கொள்வார் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொள்வார். வேறு எந்தப் பயணும் இருக்காது.
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பின்னரும் பேசிய அவர், பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவுக்கு முதலீடு வரும் என்று சொன்னார்.
ஜப்பான் பயணத்தை முடித்த பின்னர், "இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் 3.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யும்" என்றார்.
சீன பயணத்தை முடித்த பின்னர், "சீன நிறுவனங்கள் இந்தியாவில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யும்" என்றார். ஏதாவது முதலீடு செய்யப்பட்டதா?
சவுதி பயணத்துக்குப் பின்னர், "ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனங்களால் 100 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்யப்படும்" என்றாரே.
ஆனால் இதுவரை எவ்வித முதலீடும் செய்யப்படவில்லை. மொத்ததில் ஒரு தேசப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்" என்றார்.