ஹாத்தரஸ் பாலியல் வழக்கின் போராட்டம் எதிரொலி: உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உத்திரப்பிரதேசம் ஹாத்தரஸ்வாசிகள் அனைவருக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை இன்று தொடங்கப் பட்டுள்ளது. இது, அங்கு நடைபெற்ற பாலியல் வழக்கின் போராட்ட எதிரொலியாகக் கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 14 இல் ஹாத்தரஸின் கிராமத்தில் புல்வெட்ட தன் தாயுடன் சென்ற 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஒவ்வழக்கில், தாக்கூர் எனும் உயர்சமூகத்தின் 4 இளைஞர்கள் கைதாகி உள்ளனர்.

பலாத்காரத்திற்கு பின் நடைபெற்ற தாக்குதலால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அப்பெண் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். இதில் பலனின்றி கடந்த செப்டம்பர் 29 இல் உயிரிழந்தார்.

மறுநாள், இவரது உடலை அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் ஹாத்தரஸ் போலீஸாரே எரித்து விட்டனர். இவ்வாறு பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட அந்த தலித் சமூகப்பெண்ணிற்காக அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா, திரிணமூல் காங்கிரஸின் டெர்ரீக் ஒ பிரென், பீம் ஆர்மி அமைப்பின் சந்திரசேகர ஆசாத், ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் என பல்வேறு முக்கிய அரசியல்வாதிகள் குழு பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்தது.

இதன் காரணமாக டெல்லியின் பத்திரிகையாளர்கள் பலரும் ஹாத்தரஸில் முகாமிட்டிருந்தனர். அதேபோல், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் பாஜக தலைவர்கள் பலரும் கூட்டம் கூடி விவாதித்தனர்.

இதனால், உ.பி.யின் சிறிய நகரமான ஹாத்தரஸ் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு போலீஸாரின் நெரிசலில் சிக்கித் திண்டாடி வருகிறது. நாடு முழுவதிலும் தொடரும் கரோனா பரவல் சூழலால் அங்கு போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்களில் பலருக்கும் தொற்று ஏற்பட்டது.

இதன் காரணமாக, கரோனா மற்றவர்களுக்கும் பரவி விடாமல் தடுக்க ஹாத்தரஸில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சோதனையை அடுத்து இரண்டு நாட்களில் முடிவு பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in