

பகுஜன் சமாஜ் கட்சித் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, நடந்த உண்மைகளை அறிவதற்காக எங்கள் கட்சிப் பிரதிநிதிகள் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றனர். அக்குடும்பத்தினரிடம் பேசியதற்காக எங்கள் கட்சிப் பிரதிநிதிகள் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, பிடித்து வைக்கப்பட்டனர். அப்பெண்ணின் குடும்பத்தினருடன் பேசிய பிறகு எங்கள் கட்சியினர் அளித்த அறிக்கை எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. இது என்னை ஊடகங்களை சந்திக்க கட்டாயப்படுத்தியது.
அதன் பிறகு, பத்திரிகையாளர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டதும், ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் மீது தடியடிப் பிரயோகமும் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது ஆகும். யோகி ஆதித்யநாத் அரசு தனது ஆணவப் போக்கு மற்றும் சர்வாதிகார அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகைய போக்கு ஜனநாயகத்தின் வேர்களை பலவீனப்படுத்திவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.