

வியாபம் முறைகேடு தொடர்பாக பதியப்பட்டு பல்வேறு நிலைகளில் விசாரிக்கப்படும் 72 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வார காலத்துக்குள் வழக்குகளை எடுத்துக்கொள்ளவும் உத்தர விட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசுப் பணி நியமனங்களுக்கான தேர்வு, மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தும் வியாபம் அமைப்பில் பெரும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் இறந்தது நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ கோரிக்கை
இவற்றில் பல வழக்குகளை மாநில தனிப்படை விசாரித்து வருவதால், வழக்கு விசாரணை தாமதமாவதைத் தவிர்ப்பதற்காக தனிப்படை மற்றும் மாநில காவல்துறையே தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு அப்போது நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
கடந்த ஜூலை 9-ம் தேதி வியாபம் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் சி.நாகப்பன், அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “வியாபம் தொடர்பாக பல்வேறு நிலைகளில் உள்ள 72 வழக்கு களையும் 3 வாரங்களுக்குள் சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மேலும், இவ்வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு தனிப்படை சிபிஐக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்க வேண்டும்.
24 விசாரணை நீதி மன்றங்களில் நடைபெறும் விசா ரணையை துரிதப்படுத்துவதற் காக 48 அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
வரும் அக்டோபர் 9-ம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அன்று இந்த உத்தரவுகளின் நிலை குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.