

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா கிளை நதியில் படகு நேற்று கவிழ்ந்த விபத்தில் சுமார் 50 பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் காமரூப் புறநகர் மாவட்டம், சம்புபாரா என்ற இடத்தில் கலகி நதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அருகில் படகுப் போட்டி நடக்கும் இடத்துக்கு 250 300 பேருடன் இந்தப் படகு சென்றது.
இந்நிலையில் இன்ஜின் பழுதானதால் படகு கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது பாலம் ஒன்றின் தூணில் மோதி படகு கவிழ்ந்தது.
விபத்தைத் தொடர்ந்து பெரும்பாலானோர் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்தனர். என்றாலும் கரை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 50 பேரை காணவில்லை. இவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில அரசின் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.