ஹாத்தரஸ் பலாத்காரக் கொலை: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி: கோப்புப் படம்.
காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி: கோப்புப் படம்.
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தில் ஹாத்தரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்தரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மாதம் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரின் உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பின்னர் சனிக்கிழமை மீண்டும் செல்ல முயன்றபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

ஹாத்தரஸ் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் உ.பி.யில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தக் கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை அமைத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளார்.

இன்னும் ஹாத்தரஸ் சம்பவத்தின் பரபரப்பு அடங்கவில்லை. ஹாத்தரஸ் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “உள்ளூர் விஷயத்திலிருந்து உலக சம்பவங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் பிரதமர் மோடி குரல் கொடுத்துவருகிறார். ஆனால், மனதைக் கசக்கிப் பிழியும் ஹாத்தரஸ் சம்பவத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மட்டும் இன்னும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு என்ன நேர்ந்தது? உங்களின் ஒவ்வொருவருக்கான வளர்ச்சி, ஒவ்வொருவருக்கும் ஆதரவு, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை எனும் வார்த்தை என்ன ஆனது. ஹாத்தரஸ் சம்பவத்துக்குப் பின், உங்களின் பாசாங்குத்தனம் வெளிப்பட்டுவிட்டது.

உங்களின் ஒவ்வொருவருக்கான வளர்ச்சி, ஒவ்வொருவருக்கும் ஆதரவு, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை எனும் கோஷத்துக்குப் பதிலாக வாயை மூடு இந்தியா, மறைத்துவிடு இந்தியா என்று மாற்றிக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹாத்தரஸ் சம்பவத்தில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடந்த வாரம் பேசினார். அப்போது, குற்றத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி கண்டிப்புடன் உத்தரவிட்டார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in