

வேளாண் சட்டங்களை குறித்து பொய்யான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மஜால்தா பகுதியில் இருக்கும் விவசாயிகள் மற்றும் கிராம பிரதிநிதிகளோடு மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் உரையாடினார்.
அப்பாவி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை குறித்து பொய்யான தகவல்களை அவை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய புதிய சட்டத்தின் படி, ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் முறித்துக் கொள்ளலாம் என்றும் அதற்காக அவர்கள் எந்தவிதமான அபராதமும் செலுத்த தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் மூலம் நிலையான விலையை விவசாயிகள் பெறலாம் என்றும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வருமானத்தை உயர்த்தவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.