

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான 14 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை ரூ.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துகளை வாங்கியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐக்கு வலுவான ஆதாரங்களை மற்ற விசாரணை அமைப்புகள் வழங்கியதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதில் கர்நாடக மாநிலத்தில் 9 நகரங்களிலும்,டெல்லியில் 4 இடங்களிலும், மும்பையில் ஒரு இடத்திலும் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் இதுவரை கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகாவின் கனகாபுராவில் உள்ள தோடலஹல்லியில் உள்ள சிவக்குமார் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர கர்நாடகாவில் ராமநகரம், பெங்களூருவில் இருக்கும் டி.கே.சிவக்குமாரின் இளைய சகோதரர் சுரேஷ் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலைவரை சோதனை தொடர்ந்து நடக்கலாம் என்பதால் மேற்கொண்டு விவரங்களை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில் “ மத்தியில் ஆளும் மோடி அரசும், கர்நாடகாவில் ஆளும் எடியூரப்பா அரசும் சிபிஐ அமைப்பைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி, மிரட்டல் விடுத்து, அரசியலில் நேர்மையற்ற முறையில் நடந்து சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடத்துகின்றன. இதன் மூலம் எங்களைப் பணிய வைக்க முடியாது. எடியூரப்பா அரசில் உள்ள ஊழலின் படிமங்களை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், ரெய்டு ராஜ்ஜியம் நேர்மையற்ற முறையில்தான் செயல்படுகிறது.
மோடி, எடியூரப்பா அரசுகள், பாஜகவின் ஆதரவு அமைப்புகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் அறத்துக்கு மாறான செயல்களுக்கு காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் பணிந்துவிடமாட்டார்கள், தலைவணங்கவும் மாட்டார்கள்.
மக்களுக்காகப் போராடுவோம். பாஜகவின் மோசமான நிர்வாகத்தையும் வெளிப்படுத்தத் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாஜக அரசு எப்போதும் பழிவாங்கும் அரசியல் செய்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறது. இன்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தப்படுவதன் மூலம் இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயாராகும் முயற்சியைக் குலைக்கிறது” எனக் கண்டித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் நவம்பர் 3-ம் தேதி சிரா மற்றும் ஆர்ஆர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் சிபிஐ அமைப்பு, சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடத்துவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்துக்குப் பின், அக்டோபர் 23-ம்தேதி ஜாமீனில் சிவக்குமார் விடுவிக்கப்பட்டார்.