

டெல்லியில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் பதுங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
டெல்லியின் ஐடிஓ பகுதியில் ஆயுதங்கள், வெடிமருந்துகளை சிலர் ரகசியமாக திரட்டி வருவதாக போலீஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மர்ம நபர்களுக்கு வலைவிரித்த போலீஸார் நேற்று முன்தினம் அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவர்கள் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அல்டாப் அகமது தர் (25), சோபியான் பகுதியைச் சேர்ந்த அகின் சாபி (22), இஷ்பாக் மஜீத் கோகா (28), முஸ்தாக் அகமது கனி (27) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இஷ்பாக் மஜீத் கோகா என்பவர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி பர்கான் கோகா என்பவனுடைய சகோதரர் ஆவார். பர்கான் கோகா கடந்த ஏப்ரல் மாதம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதும், தீவிரவாதிகள் அவரது சகோதரர் இஷ்பாக் மஜீத் கோகாவை டெல்லியில் தாக்குதல் நடத்த அணுகியுள்ளனர். டெல்லியில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் 4 பேரும் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி டெல்லி வந்து பஹர்கஞ்ச் பகுதியில் தங்கி ஆயுதங்களை சேகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.