

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “எல்லை அருகே உள்ள மான்கோட் செக்டார் பகுதியில், அதிகாலை 3.20 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எல்லையில் இருதரப்புக்கும் இடையே காலை 5 மணி வரை சண்டை நீடித்தது. இதனால் எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர்” என்றார்.