

கேரளாவில் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகமானது.
இந்நிலையில், கரோனாவை தடுக்க கேரள அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 20 முதல் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.
நேற்று முன்தினம் முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இம்மாதம் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று முன்தினம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருவனந்தபுரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவி்த்தனர்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, "கரோனா பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தொற்றைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்’’ என்றார்.