

புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கும் கட்சிகள், இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர்வதை விரும்புகின்றனவா என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோவா வந்துள்ள பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு குறைவாக விலை கிடைக்கிறது. ஆனால் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இடைத்தரகர்கள். இவர்கள் இடையில் விலையை ஏற்றிவிடுகிறார்கள். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளன.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றன. இதன் மூலம் இடைத்தரகர்களை ஆதரிக்கும் இடைத்தரகர்களாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகின்றது. காங்கிரஸ் அறிக்கைகளைப் பார்த்தால் தெரியும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இது போன்ற சீர்திருத்தங்கள் அவசியம் என்று பேசியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தற்போது இந்த சீர்திருத்தங்களை எதிர்க்கிறது.
இவர்களின் போராட்டங்கள் கிளம்பிய வேகத்திலேயே காணாமல் போகும். காரணம் பொய் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்தியாவில் 60 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஜிடிபியில் வேளாண் பங்கு 15 சதவீதம் மட்டுமே. இந்த வேளாண் சட்டங்கள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் வெளிநாடுகளில் இந்திய வேளாண் பொருட்களுக்கான சந்தைகளை விரிவுபடுத்தவும் செய்யும்.
இவ்வாறு ஜவடேகர் கூறினார்.