கல்வானில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கு நினைவுச் சின்னம்

கல்வான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னம்.
கல்வான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னம்.
Updated on
1 min read

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்து கூடாரங்களை அமைத்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் நடந்த சீன - இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையிலான கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளில் ராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டது. பின்னர் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, உயிர்த் தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களின் நினைவாக கல்வான் பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் லடாக் சாலையில் இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அந்த நினைவுச் சின்னத்தில், 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கமான்டிங் ஆபீசர் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான ராணுவப் பிரிவு, இங்கு அமைக்கப்பட்டிருந்த சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவப் பிரிவு (பிஎல்ஏ) கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. அப்போது நடந்த கைகலப்பில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர். முன்னதாக அந்த கூடாரங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அகற்றியது. மேலும் சீனாவின் பிஎல்ஏ ராணுவப் பிரிவுக்கும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. வீரமரணம் அடைந்த வீரர்கள் கல்வானின் வீரதீரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டு இந்திய - சீன எல்லைப் பிரச்சினையில் நடந்த உயிர்ப்பலிக்குப் பிறகு நடந்த சம்பவமாகும் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in