Published : 04 Oct 2020 07:36 PM
Last Updated : 04 Oct 2020 07:36 PM

அனைவருக்கும் உணவு-தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உறுதி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் முதல் தவணையாக தமிழ்நாட்டிற்கு 17 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

அனைவருக்கும் உணவு என்ற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் தவணையாக தமிழ்நாட்டுக்கு 17 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐந்தாம் கட்ட ஊரடங்கின் போது அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும், பல்வேறு தினக்கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் உட்பட அனைவரும் பயனடையும் வகையில் நவம்பர் மாதம் வரை நியாய விலைக் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு 2007- 2008 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிதியாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் முதல் தவணையாக 17 கோடியே 53 லட்சம் ரூபாய் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பட்டியல் பிரிவினருக்கு சிறப்பு நிதியாக கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்த மொத்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து 3 கோடியே 21 லட்சம் ரூபாய் அரிசிக்கும், 10 கோடியே 15 லட்ச ரூபாய் பருப்புக்கும், 81 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் முழு தானியங்களுக்கும், 3 கோடியே 34 லட்ச ரூபாய் ஊட்டச்சத்து தானியங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு 40 சதவிகித நிதியை ஒதுக்கி இந்த திட்டத்தை செயல்படுத்தும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருபத்தி ஐந்து மாநிலங்களில் உள்ள 194 மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இவற்றில் தமிழகத்தில் 8 மாவட்டங்களும் ஆந்திரப் பிரதேசத்தில் ஐந்து மாவட்டங்களும் உத்தரப்பிரதேசத்தில் 23 மாவட்டங்களும் அடங்கும். இதேபோல் இந்த சட்டத்தின் கீழ் பருப்பு வகைகள் 29 மாநிலங்களில் உள்ள 638 மாவட்டங்களில் வினியோகிக்கப்படுகிறது. இவற்றில் தமிழகம், ஆந்திரா, அசாம் மற்றும் பிகாரில் 30 மாவட்டங்கள் அடங்கும். இதேபோல் முழு தானியங்கள் 28 மாநிலங்களில் மொத்தம் 265 மாவட்டங்களில் வினியோகிக்கப்படுகிறது. இவற்றில் தமிழகத்தில் மொத்தம் 10 மாவட்டங்கள்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் 61 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும் 38 லட்சத்து 52 ஆயிரம் டன் முழு மற்றும் ஊட்டச்சத்து தானியங்களும் 5 இலட்சத்து 54 ஆயிரம் டன் பருப்பு வகைகளும் 95 லட்சத்து 82 ஆயிரம் டன் உணவு தானியங்களும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களின் உற்பத்தியை பெருக்கி அதன் இருப்பை உறுதி செய்வதே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். கடந்த செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி உட்பட பல்வேறு மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் வேளாண் அதிகாரிகளிடம் இருந்து திணை விதைகள் கிடைக்கப்பெற்ற பூனம்பாளையத்தை சேர்ந்த விவசாயி திரு ரங்கசாமி, கம்பு திணை விதைகளை ஒரு ஹெக்டர் நிலத்தில் தான் பயிரிட உள்ளதாக கூறினார். அரசின் திட்டத்தின் படி உதவி வேளாண் அலுவலர் திரு பார்த்திபன் மற்றும் வேளாண் மேலாளர் திருமதி அபிராமி ஆகியோர் கம்பு திணை விதைகளை வழங்கினர்.

நியாயவிலைக் கடைகளின் மூலம் அனைவருக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உறுதி செய்கிறது. ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது நாடு முழுவதும் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் முறையான அரிசி மற்றும் தானியங்கள் பெற்று பயனடைவார்கள். உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் இலக்கை எட்டுவதற்கும், வேளாண் துறை, விவசாயிகளை வழி நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x