Last Updated : 04 Oct, 2020 04:22 PM

 

Published : 04 Oct 2020 04:22 PM
Last Updated : 04 Oct 2020 04:22 PM

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்காக இயற்றப்பட்டது என்றால் ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கானது, அவர்களுக்காக இயற்றப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தால், நாடுமுழுவதும் விவசாயிகள் இந்த சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.

விவசாயிகள் நலனுக்கான சட்டம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் அடிமைகளாக்கும் சட்டம், குறைந்தபட்ச ஆதார விலையை அழிக்கும் சட்டம் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் கேத்தி பச்சாவோ யாத்ரா எனும் பெயரில் டிராக்டரில் ராகுல் காந்தி பயணம் செய்து இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளார்.

இந்த டிராக்டர் ஊர்வலத்துக்காக பஞ்சாப் மாநிலம் மோகாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று வந்து சேர்ந்தார். மோகா அருகே பந்த்னி காலன் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் அமரிந்தர் சிங், நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்கார், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத், எம்எல்ஏ நவ்ஜோத்சிங் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

விவசாயிகளின் நலனுக்காக என்று கூறிவிட்டு அவர்களுக்கு எதிராகச் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சட்டத்தை இவ்வளவு வேகமாக நிறைவேற்றுவதற்கான காரணம் என்ன?

இந்த சட்டம் விவசாயிகளின் நலனுக்காக இயற்றப்பட்டது என்று பிரதமர் மோடி கூறுகிறார். விவசாயிகளுக்காக இந்த சட்டங்கள் இயற்றப்பட்டது என்றால், ஏன் மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்கவில்லை.

இந்த சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால், எதற்காக் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்போகிறார்கள். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?

மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தால், வேளாண் பொருட்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை முறை அழிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமும் வேதனையும் கொள்கிறார்கள். மிகப்பெரிய நிறுவனங்களுக்காக விவசாயிகளை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று இருந்தேன். இதுவரை கொலையாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் மகளை இழந்த குடும்பத்தினர் வீட்டுக்குள் பூட்டிவைக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட ஆட்சியரும், முதல்வரும் அவர்களை மிரட்டி வைத்துள்ளார்கள். இதுதான் இந்தியாவின் இன்றைச சூழல். கிரிமினல்களுக்கு எதிராக ஒன்றும் நடக்காது, மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில் “ மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் கூட்டாட்சி அமைப்பின்மீதான தாக்குதல். மத்திய அரசு சில முதலாளிகளால்நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் உரிமைகளை மத்தியஅரசு பறிக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள் அனைத்தும் அமெரி்க்கா, ஐரோப்பாவில் தோல்வி அடைந்த முறை. புதிய சட்டங்களால் 5 லட்சம் தொழிலாளர்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு சித்து பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x