

உத்தரப்பிரதேசம் ஹாத்தரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19வயது இளம் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணையும், மாவட்ட ஆட்சியரை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரியங்கா காந்தி முன்வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.
இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹாத்தரஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்றபோது தடுத்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர். ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு கவுதம் புத்தாநகர் மாவட்டத்தில் உள்ள டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உ.பி. உள்துறை அமைச்சகம் சார்பில் விடுத்த அறிவிப்பில் 5 பேர் மட்டும் ஹாத்தரஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, இந்தத் கவலை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு காரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸார் 5 பேர் ஹாத்தரஸ் நகருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றனர்.
ஹாத்தரஸ் மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ஆறுதல் தெரிவித்தனர். அவர்களிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தனர், குறைகளை தீர்த்து வைப்பதாகவும், நியாயம் கிடைக்க போராடுவதாகவும் உறுதியளித்தனர்.
அதன்பின் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 5 கேள்விகளை உ.பி. முதல்வருக்கு எழுப்பியுள்ளார். அதில் “ ஹாத்தரஸ் குடும்பத்தினர் எழுப்பும் 5 கேள்விகள்.
1. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. ஹாத்தரஸ் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு எந்த பெரிய பதவியும் வழங்கப்படக்கூடாது.
3.எங்களின் அனுமதியின்றி எங்களின் மகள் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது ஏன்.
4. ஏன் நாங்கள் பேசும் வார்த்தை தவறாக திரிக்கப்பட்டு, மிரட்டப்படுகிறோம்
5. நாங்கள் இறுதிச்சடங்கிற்கு மலர்மாலை வாங்கி வந்தோம், ஆனால் போலீஸார் காட்டும் உடல் எங்கள் மகளின் உடலா என எவ்வாறு நம்புவது.
இந்த கேள்விகளுக்கு பதில் பெற பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது. உத்தரப்பிரதேச அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஹாத்தரஸ் சென்று பாதி்க்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தேன், அவர்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளித்தேன்.
அந்த குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க தேவையான உதவிகள் செய்வோம்.
ஒட்டுமொத்த தேசமும் தேசத்தின் மகளுக்கு நீதி கிடைக்க துணையிருக்கும் போது, உத்தரப்பிரதேச அரசு தன்னிட்சையாக செயல்படமுடியாது” எனத் தெரிவித்தார்.
உ.பி.போலீஸார் நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் நடந்து கொண்ட முறை காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியபோது அதைத் தடுக்க பிரியங்க காந்தி வந்தபோது அவரின் குர்தாவைப் பிடித்து போலீஸார் இழுத்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.